இருப்பவர்க்கே இறைவனாம்.
திருப்பதி தேடிச்செல்வார்.
திருப்பணிகள் செய்திடுவார்.
வருமானத்தில் ஒளித்ததை
வாரி வாரிக் கொட்டிடுவார்.
-ஆனால்
தெருக் கோடி முருகனுக்கோ
ஒரு ரூபா கூட ஈய மாட்டார்.
திறந்த வெளி வெய்யிலில்
உருக்குலையக் காயவிட்டார்.
உயிருக்குப் போராடுகிறான். கொடுமைக்கு உள்ளாகிறான்.
ஒருவேளைக் கஞ்சிக்கேழை
சிறுமைப் பட்டு சீரழிகிறான்.
வயிற்றுப் பசிக்கொடுமையால் வறுமையில் வாடுகிறான்.
கொட்டடிக் கூலி வேலை
பட்டினியில் உழைக்கிறான்.
-ஆனால்
தயவில்லா எசமானன்,
இரக்கமிலாத் தனவந்தன்,
கொல்கத்தா காளிக்கவன்;
பட்டாடை போர்ததுகிறான்.
குடிப்பதற்கே நீரில்லை,
கோபாலுக்குப் பாலாபிசேகம்..
பாதையே ஏழைக்குப்
பள்ளியறை அவமானம்.
பரந்தாமனுக்குத் தங்கத்தில்
துயிலூஞ்சல் சீதனம்.
-ஆனால்
அரசாங்கம் கடன் வாங்கும்,
அயல் நாட்டைக் கண்டு ஏங்கும்,
வருமானம் ஒளிக்கும் மேலோர்
வசதிக்குச் சாமி தூங்கும்.
கடவுளுக்கும் கையூட்டா?
கற்பகிரகம் தனிக்கோட்டா.
உடனடித் தரிசனம்
கடவுளவர் கரிசனம்.
காசிருந்தால் பேசலாம்
கடவுளையே காணலாம்
-ஆமாம்
இருப்பவனுக்கே இறைவனாம்
ஏழைக்கவன் தொலை தூரம்.
பணம் கொடுத்தால் பகவானே
பக்கம் வந்து அமருவான்.
உழைப்பவன் ஏழைக்காக
உதவிடக் கருணை இல்லை.
சிலையான பரமனுக்கு
அருள் செய்ய இரக்க மில்லை.
விலை தந்தால் வரம் தரும்
நிலைமை என்ன கடவுளுக்கு!
பிழையாகப் பிழைப்பவனுக்கு
விலை போன சாமி எதற்கு?
-பாவம்
தலை வாசல் படி போல
நிலை கிடந்து பணி செய்யும்
வாழை போல் தலை பணிந்த
ஏழைக் கென்ன வாழ்வுண்டு.
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
..
No comments:
Post a Comment