Friday, 7 March 2014

உள்ளம் என்பது கோவில்.

உள்ளம் என்பது கோவில்

உள்ளம் என்பது கோவில்---அதில்
உள்ளது நீதான் சாமி.
உன்னைத் தொலைத்துத் தேடு-பாவக்
கண்களை மறந்து கூடு.

இல்லை என்பதும் இருக்கின்றது.--அங்கே.
இருப்பதும் நீயே தெரிகின்றது.
இருண்ட உண்மை ஒளிர்கின்றது.—நெஞ்சம்
மருண்ட மாயை தெளிகின்றது.

கலையின் அம்சம் கோவிலது.--ஆசை
அலையும் நெஞ்சின் கூடலது.
தொலையும் பொய்மை ஆவலங்கு---தொலைந்து
தொடரும் மெய்மை தேடலங்கு.


கலையாய் உன்னை இரசித்திடத்தான்.--மெய்மை
நிலையாய் உள்ளம் வசித்திடத்தான்.
அமைதி சொல்லும் சிலைகளிலே--உந்தன்
அனுபவம் செதுக்கி படிக்கவைத்தான்.
 
சத்தியம் வாழும் இத்தரை-காவல்
சட்டமும் மன்றமும் தேவையா?
அறமே ஞானம் கல்வியாம்-ஆனவப்
புறமும் தீய்ந்த செல்வமாம்.

கொ.பெ.பி.அய்யா.





Tuesday, 4 March 2014

நாத்திகம் ஆத்திகம்.

புலனாகப் பொருளென்ன?

பாடட்டுமா பாடட்டுமா பாட்டு ஒண்ணு பாடட்டுமா
தேடுகிற மனிதனுக்கு தேடி ஒண்ணு பாடட்டுமா
பாடட்டுமா பாடட்டுமா பாட்டு ஒண்ணு பாடட்டுமா
தேடுகிற மனிதனுக்கு தேடி ஒண்ணு பாடட்டுமா (பாடட்டுமா)

ஆத்தீகம் நாத்தீகம் அதுகூறும் பொருள் என்ன?
காவீயம் கருப்பீயம் கருத்திலது அறிவென்ன?
இருக்கென்றும் இல்லையென்றும் இயம்புவதன் விடையென்ன?
பொறுப்புடனே ஆராய்ந்தால் புலனாகாப் புதிரென்ன?

ஒன்றிலொன்று மற்றொனறு ஆனாலது  மறுமலர்ச்சி.
நன்றில்நன்று ஏற்பதிலே தானதுவும் பெறும்வளர்ச்சி.
பேதம்வாதம் செய்வதிலே ஆகுவதும் தெளிவுணர்ச்சி.
சேதம்நீக்கி செம்மையென சீரானால் அழகுணர்ச்சி .

அடிமைத்தனம் நீக்குவதும் உரிமைநலம் காப்பதுவும். 
அதுகூறும் நாத்திகம் ஆனதொரு புதுமார்க்கம்.
ஆழ்வார்கள் நாயன்மார்கள் அப்படித்தான் பெரியாரும்
ஆய்ந்துபாரதி வள்ளலார் அவ்ர்போலே இவர்மொழியும்.

பொய்யுரைகள் புறஞ்செய்வோம் மெய்யின்வழி மேற்கொள்வோம்.
உய்யும்வழி தமிழ்மரபில் உளம்கொண்டு வாழ்ந்துகொள்வோம்.
செய்யுரைகள் சீரறிந்து சிறக்கமேலும் ஏற்றுக்கொள்வோம்..
ஐயமின்றி அவரவரின் அறிந்தவழி ஆற்றிக்கொள்வோம்.

மூலமென்று ஒன்றுண்டு ஞாலமதில் தோற்றமுண்டு
காலமதன் தொடர்வினையில் கோலங்கள் மாற்றமுண்டு.
பாலமாய் ஒன்றுக்கொன்று பாதைகளும் சேர்வதுண்டு.
ஆழமாய் ஆராய்ந்தால் ஆகிநிற்கும் புள்ளியொன்று.

கவஞர்.கொ.பெ.பிச்சையா.








Friday, 21 February 2014

ஒன்னு தொட்டய்யன்.


வாழ்த்து
அம்மா ஒன்னுத் தாயம்மா!
அய்யா தொட்டன் துணையம்மா!
உழைக்கும் குலத்தின் தேவியே!
பிழைக்கும் வழியும் காமியே!

ஆயர் பாடித் தெய்வமே!
அழைத்துத் துதியும் செய்வோமே!
ஆவாய் எம்மைக் காத்துமே!
அருள வேண்டும் தீர்க்கமே!

கொல்லம் பரும்பு தேடியே! 
கோவில் கொண்ட தேவதையே!
கம்மாக் கரையதன் மேலேயே!
காட்சி தருகின்ற தீமகளே!

இலந்தை முள்ளுக் கோட்டையே!
எழுப்பக் கேட்ட காவிரியே!,
வளரும் தமிழிந்த நாட்டையே
வாழ்விப்பாய் அம்மா வாழ்கவே!.

புல்லாங் குழலையும் மீட்டுவாய்!
புதுப்புனல் நீயுங் காட்டுவாய்!
குடகு மலையின் கொடைமகளே
நடை பயின்றுவா காவிரியே!

நெருப்பில் பிறந்த தேவியே!
நீதி காக்குங் கோவியே!
வாடும் பயிரும் விளையவே
ஓடி வருவாய் காவிரியே!

உறுமிமேளம் தாளம் கொட்டி,
உனதுபுகழே கானங் கட்டி
உருக நாளும் கெஞ்சுகிறோம்.
வருக அருள்க ஒன்னம்மா!

பாட்டாளி குலமிங்கு என்னாளும்
பசிவலி  மறந்து வாழனும்.
கூட்டாக் கூடி ஒற்றுமையாய்
குலம்எம்மை தழைக்க வைப்பாய்!.

அனுப்பர் எல்லாம் கூடுவோம்.
அம்மா அவளைப் பாடுவோம்.
அன்னை ஒன்னு காவிரியாம்.
அனுப்பர் குலத்தின் காவலவளாம்.



கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 18 February 2014

மார்கழியே வருக.

மார்கழியே வருக!

காலைப் பனியில் கோலம் வரைவரோ!
வாலைக் குமரிகள் கால முமார்கழியோ!
காலைப் பதித்திட மாயன் வருவனோ!
வாலைக் கதிரவன் காணு முனெழுவரோ!

ஆளை எழுப்பிட காலை முழங்கிடும்
தாள இசையொலி வானம் நிறைந்திடும்.
ஆண்டாள் தொழுதிடும் ஆனந்தப் பஜனனைகள்
ஆன தெருக்களும் ஆகும் ஸ்தலங்களாம்.

வாடைக் குளிரிலும் ஊரு விழித்திடும்
ஆடை நனைத்தும் நீரு குளித்திடும்.
ஆடும் மணிகளும் ஆலயம் முழக்கிடும்.
தேடும் இறைகணம் கேட்டு எழுந்திடும்.

வேளை விடியலில் வீதி விரைந்திடும்.
வேத வசனங்கள் நீதி உரைத்திடும்
வாசத் திரவியம் சாந்தும் மணந்திடும்  
பூசை மலர்களும் பூத்துச் சிரித்திடும் .

ஆக்கும் அழகது பூக்கும் முகமலர்
ஏற்கும் கடவுளை சேற்கும் அகம்வளர்
நேர்த்தி யதனில் தேக்கி நிறையுமே!
மூர்த்தி நிசமே தோன்றத் தெரியுமே!

பாடும் குரல்களே பாடிக் கலந்திடும்.
தேடும் பகவனை சூடிப் பணிந்திடும்.
மூடிய இரவும் ஓடி ஒளிந்திடும்.
தேடிய விடியலும் கூடி ஒளிர்ந்திடும்.

பேசும் மனிதம் வீசும் சுகந்தமே!
வாசம் இறைவனில் நேசம் பகர்வதே!
நாடும் வழிகளே ஆகும் பல பல
கூடும் இடமோ தேறும் ஒருவனில்,
கொ.பெ.பி.அய்யா,






                                              .








திருப்பதி மலையப்பா.

உள்ளம் ஒரு கோவில்.

திருப்பதி மலையப்பாஉன்
திருவடி துணையப்பா
இருப்பது நிலையப்பாஅது
ஏழையின் மனதப்பா.

உண்டியல் நிறைத்திட்டேன்--நான்
உன்னடி கரைந்திட்டேன்.
உண்டியும் கொடுத்திட்டேன்ஏழை
உளம் நிறைக்க மறந்திட்டேன்.

அன்னமும் தானமும்நான்
ஆயிரமும் செய்திட்டேன்.
எண்ணமும் நிறையவும்ஏழை
எண்ணமதை மறந்திட்டேன்.  

தேரதுவும் இழுத்திட்டேன்நான்
தெருவெல்லாம் பூவிட்டேன்.
ஊர் வாழும் வறுமையில்ஏழை
உழலுவதும் மறந்திட்டேன்.

பட்டுனக்குக் கட்டிட்டேன்நான்
பகட்டினைக் காட்டிட்டேன்.
ஒட்டுத்துணி ஒட்டாதஏழை
உறுபிணி மறந்திட்டேன்.

தோரணங்கள் அமைத்திட்டேன்நான்
ஊருக்கும் காட்டிட்டேன்
தெருவினில் படுத்துறங்கும்ஏழை
 நிலைமையை மறந்திட்டேன்.

ஊரெல்லாம் கூட்டிட்டேன்நான்
ஊர்கோலம் செய்திட்டேன்.
ஊரினில் ஒரு கோவில்ஏழை
கூரையை மறந்திட்டேன்.

கோவிலும் கட்டிட்டேன் நான்
கோபுரமும் உயர்த்திட்டேன்.
உண்மையில் உன் கோவில்ஏழை
உள்ளமென மறந்திட்டேன்.

மலையேறி வந்திட்டேன்நான்
உனைத் தேடி அலைந்திட்டேன்
இல்லையெனப் புரிந்திட்டேன்ஏழை
மனத்தேற மறந்திட்டேன்.

கொ.பெ.பி.அய்யா.














பக்தி மாலை.

ஒரு குயிலின் குரல்.பக்தி மாலை.

அண்டம் முதலோன் ஆகாய வினையவன்
ஆளும் பகவனைத் தேடு-தண்டம்
கற்றதன் பயனது வென்னவோ சொல்வமோ!
பெற்றது போற்றா அறிவு.

உம்மில் உளதாம் இறையை உணர்க
துணியும் நலன்கள் பெறுக!நம்மில்
உயிர்கள் எல்லாந் தன்னிற் கொள்க
தம்மில் நினைந்துமே நீ தேடு.

தீவினைப் பயன்கள் தீண்டா துனையே
தீர்வினையே இறையெனப் பாடு.
புலன்கள் ஐந்தும் கடந்தான் அவனை
போற்றிட வாழ்வே நாடு

ஒப்பிலாத் தேவன் அடியார்க்கு வறுமை
ஒண்டாப் பிணியது ஓடும்
புண்ணியக் கடலாம் அவனடி தொழுவார்.
பெறுவர்.பேறது வீடும்.

தன்னிலை யற்றத் தலையை வணங்காத்
தலையுந் தலையா மாம்?இந்நிலைப்
பிறவி மேலுந் தொடரா தொழிய
பற்றுக இறையவன் தாள்.


கவிஞர்.கொ,பெ.பிச்சையா.

மாவிளக்கு.

மாவிளக்கு அணி வகுப்பு.

மாவிளக்கு அணிவகுப்பு
மாரியம்மன் கோவிலுக்கு.
கொட்டு மேளம் நாதஸ்வரம்
குலவை ஒலி சேர்ந்து வரும்.

வேப்பிலைத் தோரணங்கள்
வீதியெல்லாம் அலங்காரங்கள்
காப்புக் கட்டி சாமி ஆட்டம்
களைகட்டும் கரகாட்டம்.

சாமி கூடி ஆடி வரும்.
ஆசாமிகள் பாடி வரும்.
கேட்டு வேண்டும் வரமெல்லாம்.
நீட்டிக் கை அருள் வழங்கும்.

உனக்குள்ளும் சாமி உண்டும்.
உள்ளிருந்து அது தூண்டும்.
உன்னை தன்னை மறக்கச் செய்யும்.
உன்னில் சாமி தானே ஆகி ஆடி வரும்.

பொங்கலிட வெண்கலமும்
தங்கமாக மின்னலிடும்.
மங்கையர்கள் சுங்கடிகள்
திங்ககளாகக் கூடிவரும்.

விண்சிந்தும் நட்சத்திரங்கள்
பெண்கள் கூட்டம் விசித்திரங்கள்.
கருமேகம் ஓட்டங்களோ !
கார்குழலாம் கூட்டங்களோ!

காளையர் வட்டங்களோ!
வளைய்ர்கள் கூட்டங்களோ!
சேலையர் சித்திரங்களோ!
குலைபடாப் பத்திரங்களோ!

எண்ணக்காளை ரசித்திருப்பர்.
வண்ணப்பெண் இசைந்திருப்பர்.
திண்ணமாய்த் தெரிந்திருப்பர்.
பெண்பார்க்க விழைந்திருப்பர்.

மஞ்சள் நீர் அஞ்சி ஓடும்--
மாப்பிள்ளைகள் தெரு ஓடும்.
கொஞ்சி இளம் வஞ்சி தேடும்
நெஞ்சழகன் நெஞ்சம் கூடும்.

சொந்தம் எல்லாம் கூடிவரும்
பந்தம் கூடித் தான் மகிழும்.
சொந்தம் பந்தம் தொடர்வதற்கும்
சம்மந்தங்கள் கூடி வரும்.

ஊரெல்லாம் ஒன்று கூடும்.
உள்ப்பகைககள் தானே ஓடும்.
தேர் இழுத்து ஊர் சேரும்.
ஊர் வலுத்து தேர் சேரும்.

நீதிக் கலை நிகழ்ச்சிகளும்.
சேதி விளை ஆட்டங்களும்.
ஓதும் நல் மந்திரங்களும்.
சூது வெல்லும் தந்திரங்களாம்.

வருடம் தோறும் கொண்டாட்டம்.
வாழ்வு அதை நிலை நாட்டும்.
பெருகி வரும் உறவுகளை
பிணைத்து அது தொடராக்கும்.


கொ.பெ.பி.அய்யா.

பயமோ பக்தியோ?

பயமோ பக்தியோ

எதைத்தொலைத்தோம்!
எதைத் தேடுகிறோம்!
தொலைத்ததும் பொய்!
தேடுவதும் நாடகம்!

இருக்கிறதென்பதோ
இலக்கு நோக்கும்
இயற்கை தாக்கம்!

இல்லையென்பதும்
இருந்தால் நலமே
எனும் ஏக்கம்!

முடிவில்லாத முடிவுகள்!
விடியல் காட்டும்
விளக்கு எது?
இருக்கிற தெனச் சொல்லவும் ஐயம்
இல்லை யெனக் கூறவும் பயம்

அதுவே தேடல்!
அதுவே ஞானம்!

அனைத்தும் கடந்துள்ள விந்தை
யாருக்குத்தான் கட்டடங்கும்!
அது இயற்கை இரகசியம்!
அதனால் தேடல் தொடர்கிறது.

வாதங்கள் வளர்வதல்ல தேடல்!
ஞானங்கள் வளர்ப்பதே தேடல்!

விந்தையை வியப்பதும்
சிந்தையில் உணர்வதும்
பயமோ!பக்தியோ!நலமே!

எதற்கு முடிவில்லையோ
அதற்குத் தீர்வில்லை!
தீர்வுகள் தேடும் ஞானமே
தெய்வ நிலை!

அறுபடைவீடுத் தேடலே
ஒருவிடை நாடும் பாடலே
தத்துவ வடிவே ஆறுமுகன்
சித்தம் முடிவே கூறுமகன்
சத்தியம் பெறவே பக்தியே
சுத்தம் ஆகவே சித்தமே.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

தியாகத் திரு நாள்.

தியாகத் திரு நாள்

இஸ்மாயில் அம்சமான
இஸ்ஸலாமிய வம்சமே
அஸ்ஸலாமு அலைக்கமென
அனைவர்க்கும் வணக்கமே!

துல்ஹஜ்த் திங்களின்
பத்தாவது நாளிலே
பக்ரூ ஈத் கொண்டாடும்
பாய்களுக்கு வாழ்த்துக்கள்.

நபித்தூதன் இப்ரஹிம்
தவப்புதல்வன் இஸ்மாயிலை
அல்லாவின் கட்டளையில்
அர்ப்பணிக்கத் துணிந்த நாள்.

இறைவனுக்குத் தியாகமாய்
தலை கொடுத்துத் தனை ஈய
நிறைந்தவன் பக்தி மெச்சி
விரைந்தவன் அல்லா வாழி!

தூயபக்தி வாழ்த்த வந்தான்.
நேயமதைப் போற்றிச் சொன்னான்.
பக்ருவே போதுமென்றான்.
பலியேற்று மனிதங் கண்டான்.

குர்பானிச் சமபந்தி
கூடியே உண்டிடுவோம்.
சர்வமும் சமமாவோம்
தர்மமேக் காத்திடுவோம்.

உலகமதன் நலம் வாழ
உயிர் கொடுக்க விழைந்தானை
உளம் மகிழ விருந்தளித்து
உறவுகொண்டு வணங்கும் நாள்.

அனைவரும் சகோதரரே!
அன்பு மொழித் தான் பாயே!
அப்பனென்றும் மாமனென்றும்
அத்தனையும் நாமானோம்.

சொந்தமான இரத்தங்களே!
பந்தமான உறவுகளே!
எந்தபேதமும் இல்லாமலே
இந்த மண்ணில் வாழுவோமே!

தியாகத்தின் திருநாளே!
தேவனல்லாப் பெருநாளே!
இறைத்தூதன் இப்ரஹிமே!
இதயங் கொள் நந்நாளே!

மெக்காவுக்கும் மதினாவுக்கும்
முகமத் நபி யாத்திரையே
இக்காலும் ஹஜ்பயணம்
இறைக்கடன் திருப்பயணம்.

இஹ்ஹாமை அணிந்திருப்பார்.
எல்லோரும் சமமென்பார்,
ஒற்றுமை விளக்கமாக
ஹஜ்ஜுக்குப் போய்வருவார்

கஃபாவைச் சுற்றிவந்தால்
சம்சம் நீர் குடித்துவிட்டால்
பிறவிப்பயன் பெற்றிடலாம்
பிறவிக்கடல் அற்றிடலாம்.

ஹஜியாக ஆகிவிட்டால்
கடமைகள் நிறைவுற்றால்
அல்லாவின் அமைதியில்
அவன் சரண் ஆகலாம்.

பி.கு::பக்ரு--செம்மறியாடு.
இஹ்ஹாம--ஹஜ்பயணச் சீருடை.
கஃபா--மெக்கா புனிதத்தலம்.
சம்சம்--இஸ்மாயில் தோற்றுவித்தப் புனித நீரூற்று.
ஹஜி---ஹஜ் பயணம் சென்று வந்தவர்.


 கொ.பெ.பி.அய்யா.

சிறுவாபுரி.

சிறுவாபுரிக்கு வாருங்கள்.

சிறுவாபுரிக்கு வாருங்கள்.
செவ்வேலழகனைக் காணுங்கள்.
மரகத மயிலினைப் பாருங்கள்.-வினை
அருகிட அவனருள் சேருங்கள்.

மரகத அழகின் திருமேனி
அரனவன் மகனின் உருமேனி
எழில் சூழ் தண்பதி சிறுவையே
பொழில் வாழ் புவியின் திருப்பதியே!

சிறுவர் இருவர் லவ குசலன்
அறியார் அவர் தந்தை இராமருடன்
போரிட்ட இடமே சிறுவாபுரி-அந்த
திருத்தலம்தானே சிறுவம்பேடு.

அருணகிரியார் அருள் பெருகி
உருகிப்பாடிய திருப்புகழில்
சிறுவையம் பதிப் பெருமானை
சிறப்பித்துத் தேடித் துதி செய்தார்.

முருகன் திருப்புகழ் தினம் பாடும்
முருகம்மாள் அவனருள் பெற்ற இடம்.
மறுத்தவள்க் கணவன் அறுத்தவள் கரமும்
பொருத்திய வள்ளல் சிறுவாபுரியன்.

வள்ளியின் கரமும் பற்றிய முருகன்
வருவோர்க்கவனே கை கொடுப்பான்.
தெய்வயானையும் உடனணப்பான்.
தேடும் அடியார்க்குத் துணையிருப்பான்.

அள்ளியே செல்வங்கள் அவன் கொடுப்பான்.
தள்ளிடும் செயல்களும் தான் முடிப்பான்.
உள்ளிய பொழுதே உறைவிடமளிப்பான்.
கொள்ளும் தொழிலும் நிறைபடைப்பான்.

ஆறு வாரங்கள் தொடர்ந்தவன் தரிசனம்
தேறும் அடியார் பெறுவார் கரிசனம்.
கூறுமவன் புகழ் கூர்வினையழிக்கும்
மாறும் வாழ்வதும் பெருகிடச்சிறக்கும்.

சிறுவா புரிக்கே ஓடுங்கள் -அவன்
சேவடிப் பெருமைகள் பாடுங்கள்.
திருவாய்  பதியதைத் தேடுங்கள்-அவன்
அருளாய்க் கொடையினை நாடுங்கள்.

கொ.பெ.பி.அய்யா.